பழவேற்காட்டில் குடிசை அமைத்து பொதுமக்கள் போராட்டம்
பழவேற்காட்டில் குடிசை அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் கள்ளுக்கடைமேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏரியில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் இடநெருக்கடி உள்ளதால் அருகே வருவாய் துறையின் கிராம நத்தம் வகைப்பாடு நிலம் 3 ஏக்கருக்கு மேல் தனியார் கல்லூரி அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பழங்குடியின மக்கள் வீட்டுமனை இல்லாததால், சாலையில் வசிக்கும் அவல நிலையில் இருப்பதாக தெரிவித்து, கிராம நத்தம் நிலத்தில் குடிசைகள் அமைத்து அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.