தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள்குறைகள் பகுதி

Update: 2022-04-27 13:06 GMT
வீணாக செல்லும் குடிநீர்

கோடைக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொடர்ச்சியாக வீணாகி செல்கிறது. தண்ணீரின் தேவையை உணர்ந்து ஆசிரியர்கள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.

பகலில் எரியும் மின் விளக்கு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் வேளாளர் தெருவில் மாதக்கணக்கில் பகலிலும் இரவிலும் மின் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகள் கவனிப்பார்களா?
-அப்துல்லா, தூசி.

குடிநீர் சுத்திகரிப்பு கருவி

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளது. இது, அடிக்கடி பழுதடைந்து சீர்செய்யாமல் இருக்கிறது. இதனால் அலுவலகம் வருவோருக்குக் கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்கவில்லை. தாகம் அதிகம் எடுக்கும் கோடைக்காலத்தில் குடிநீர் தேவையை கருதி உடனடியாக இதை சீரமைக்க வேண்டும். 
-கோபால்சாமி, கே.வி.குப்பம்.

 பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-சின்னஏழாச்சேரி கிராமத்துக்கு தடம் எண்:60 என்ற பஸ் காலை, மாலை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பஸ் வருவதில்லை. மேலும் ஒரு தனியார் பஸ்சும் இயக்கப்பட்டது. அந்தப் பஸ்சும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மு.பத்மநாபன், கீழ்நாயக்கன்பாளையம்.

குப்பை வண்டி வருவதில்லை

குடியாத்தம் ஹசேன் சாயுபு தெரு மற்றும் பல்வேறு தெருக்களுக்கு குப்பை வண்டிகள் வருவதில்லை. இதனால் குப்பைகளை காலி மனைகளில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு சிரமமாக உள்ளது. மேற்கண்ட தெரு உள்பட பல்வேறு தெருக்களுக்கு காலை நேரத்தில் குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்துச் செல்ல வேண்டும்.
-எப்.பாசில், குடியாத்தம்.

கலங்கலாக வரும் குடிநீர்

வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகிறது. அந்தக் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. அந்தத் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
-அப்பு, வேலூர்.

சாலை, கழிவுநீர் வசதி தேவை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சாலநாயக்கர் தெரு பின்பக்கம் கணபதி நகரில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு சரியாக சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. கழிவுநீர் தெருவில் ஓடி சேறும், சகதியுமாக உள்ளது. ஒரு அவசரத்துக்கு ஆட்டோ கூட தெருவில் வரமுடியாத நிலை உள்ளது. எங்கள் தெருவுக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ெசய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வாலாஜா.

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

பேரணாம்பட்டு நகரம் திரு வி.க.நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை இயங்கி வந்தது. அந்தக் கடை பழுதடைந்ததால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இந்தக் கட்டிடத்துக்கு முன்பு கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அந்தக் கால்வாயை தூர்வார ேவண்டும்.
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

தினத்தந்திக்கு நன்றி

குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை, ஆண்டியப்ப முதலி 2-வது தெருவில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-கணேசன், குடியாத்தம்.
  

மேலும் செய்திகள்