புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சி- உடுமலை மெயின் ரோட்டில் மின்வாரியம் அலுவலம் எதிர்புறம் மற்றும் மாக்கினாம்பட்டிபகுதியில் ரோட்டில் ஆங்காங்கே மாடுகள், குறுக்கு நெடுக்குமாக செல்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதேபோல் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக மாடுகள் ஒருசிலரை முட்டித்தள்ளுகிறது. எனவே பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
எஸ்.சித்ரா, பொள்ளாச்சி.
வீணாகும் குடிநீர்
கோவை -சத்தி ரோட்டில் கணபதியை அடுத்து மணியக்காரம்பாளையம் பிரிவு உள்ளது. இந்த பிரிவில் சிக்னல் இருக்கிறது. இதில் சாலை ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் தினமும் ஏராளமான குடிநீரும் வீணாகி வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், இங்கு குடிநீர் வீணாக செல்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
மனோகரன், கணபதி.
புதர் செடிகள் அகற்றப்படுமா?
கோத்தகிரி கடைவீதியில் இருந்து பொது மயானம் வழியாக குன்னூர் சாலைக்கு செல்லும் மாற்றுப்பாதையின் இரு புறமும் ஏராளமான புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறி உள்ளதுடன், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன்காரணமாக அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. மேலும், விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாலையோரம் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான் சிரில், கோத்தகிரி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
பஸ் போக்குவரத்து தொடங்கியது
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட குமாரபாளையத்தில் தினமும் 3 முறை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் மக்கள் மேடை பகுதியில் பிரசுரமாகியது. இதையடுத்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அந்த டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்தனர். அதனால் அதிகாரிகளுக்கும்,மக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் நன்றிகள்.
குமார், குமாரபாளையம்.
மின் மயானம் வேண்டும்
பெரிநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஏற்கனவே ஒரு மின்மயானம் உள்ளது. அநத மின்மயானம் பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதலாக கூடலூரில் மின்மயானம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
தார்சாலை அமைக்கப்படுமா?
கோவை வடவள்ளி அருகே உள்ள சிறுவாணி ரோட்டில் கீர்த்தி நகர் பகுதியில் தார்சாலை வசதி இல்லை. மண் ரோடாக காட்சி அளிப்பதால் மழைக்காலங்களில் ேசறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அதனால் கீர்த்தி நகர் பகுதியில் மண்ரோட்டை தரமான தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?
ஜம்புலிங்கம், கோவை.
போக்குவரத்து நெரிசல்
கோவை வெரைட்டிஹால் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சாலையோரம் கடை வைத்திருக்கும் ஒருசிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளார்கள். மேலும் சாலையோரங்களில் 2 சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒருசில நேரங்களில் வாகன விபத்துகள் அரங்கேறுகின்றன. மேலும் பொதுமக்கள் சாலையோரமாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் போக்குவரத்து துறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, கோவை.
தேங்கி நிற்கும் மழைநீர்
சுல்தான்பேட்டை ஒன்றியம் சின்னவதம்பச்சேரி கிராமத்தில் உள்ள தொடங்க பள்ளிக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகிறாாகள். குறிப்பாக வாகனங்கள் வரும் போது சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் மீது தண்ணீர் வாரி இரைக்கப்படுகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.
சுரேஷ்குமார், சுல்தான்பேட்டை.
பல்லாங்குழி ரோடு
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் ஆங்காங்கே பல்லாங்குழி ரோடு உள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். அதனால் சம்பந்தபட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க முன்வரவேண்டும்.
பாத்தீமா, ராமநாதபுரம்.