கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பறவைகாவடி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-04-27 12:39 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பக்தர்கள் ஊர்வலம்

கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் வீற்றிருந்து தினந்தோறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 15-வது நாளான 27-ந்தேதி  காலை 10 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி பறவைகாவடியில் தொங்கியவாறும், உடலில் அலகு மற்றும் கத்திகளைக் குத்தி, ஆணி செருப்பு அணிந்து நடனமாடியவாறும் நேர்த்திக் கடன் செலுத்தி ஊர்வலமாக சென்றனர். இவர்களைத் தொடர்ந்து பெண்கள் பால்குடங்களைத் தலையில் சுமந்தயவாறு சென்றனர். இந்தக் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

தாமரை வாகனத்தில் அம்மன் உலா

பறவைகாவடி, பால்குட ஊர்வலம் ராம் சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பாட் நிலையம் வழியாக கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் தேவார திருப்புகழ் இசை நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தாமரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர். 

மேலும் செய்திகள்