குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள்

குடும்ப தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-27 12:38 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியை சேர்ந்தவர் பத்தேசந்த் (வயது 72). இவர் திருக்கழுக்குன்றம் சின்ன கடை வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேம் கன்வர் (65). இவர்கள் தங்களது மகன் கமலேஷ் குமார் மற்றும் அவரது மனைவி சுஜாதாவுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் பத்தேசந்த் வழக்கம்போல் கடந்த 24-ந் தேதி மாலையில் அடகு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தனது வீட்டில் மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் பேரில், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

அக்கம்பக்கத்தினரிடம் கிடைத்த ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரித்ததில், கொலை நடந்த சில மணி நேரத்துக்கு முன்பு பிரேம் கன்வரின் மருமகள் சுஜாதாவின் காலில் அடிபட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜாதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். மேலும் போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த சுஜாதா மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கு திருமணமான சில மாதத்திலிருந்து எனக்கும் எனது மாமியாருக்கும் சிறு, சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் என் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதற்காக பீகார் மாநிலத்தில் இருந்து எனது உறவினர்கள் 17 வயதுடைய 2 பேரை வரவழைத்து 2 நாட்கள் எனது வீட்டில் தங்க வைத்து ஆள் இல்லாத நேரம் பார்த்து 3 பேரும் சேர்ந்து கத்தியால் மாமியார் பிரேம் கன்வர் கழுத்தில் குத்தினோம். இதில் அவர் உயிரிழந்தார். அவர் இறந்து போனதை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றோம்.

அப்போது நான் கால் தவறி மாடியின் மேலேயிருந்து கீழே விழுந்ததில், என் கால் உடைந்தது. என்னால் தப்பிக்க முடியவில்லை உடனே நான் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்து எனது மாமியாரை யாரோ? கத்தியால் குத்திவிட்டு, என்னையும் அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடுகிறார்கள் அவர்களை பிடியுங்கள் என சத்தம் போட்டேன். பின்னர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுஜாதாவின் உறவினர்களை சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருந்தபோது, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்