ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு அகற்றம்
ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு அகற்றப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி ஊராட்சியில் உள்ள ஏரி 97 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அந்த ஏரி ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த ஏரியில் 40 ஏக்கர் பரப்பளவை அக்கம் பக்கத்தில் நிலம் வைத்திருப்போர் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதன்ேபரில், கீழ்பென்னாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, ஆராஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது வட்ட சார் ஆய்வாளர் முனியன், சார் ஆய்வாளர் நாராயணன், ஊராட்சி செயலாளர் சுகுணா ஆகியோர் உடனிருந்தனர்.