வியாபாரி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
துணி வியாபாரி கொலை வழக்கில் கைதான தாய்-மகன் உள்பட 5 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவண்ணாமலை
துணி வியாபாரி கொலை வழக்கில் கைதான தாய்-மகன் உள்பட 5 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வியாபாரி கொலை
திருவண்ணாமலை பட்டேல் அப்துல்ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமத் (வயது 27), துணி வியாபாரி. இவர் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இரவு நல்லவன்பாளையத்தில் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை தென்னைமர தெருவை சேர்ந்த முன்னா என்ற சையது முகமது (25) தரப்பினருக்கும், முகமத் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாநகர் 1-வது தெரு வழியாக முகமத் வீட்டிற்கு வரும் போது முன்னா, அவரது தாய் ஷாமா (46), தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), அண்ணாநகரை சேர்ந்த மோசஸ் (40), மிதுலன் (23) உள்ளிட்டோர் சேர்ந்து தகராறு செய்து முகமத்தின் முதுகில் இரும்பு ராடால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அதைத் தொடர்ந்து முன்னா, அவரது தாய் ஷாமா, மோசஸ், மிதுலன், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் முன்னா, ஷாமா, மோசஸ், மிதுலன், விக்னேஷ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.