தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது

சென்னை அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-27 11:49 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தி.மு.க. வட்ட செயலாளரான இவர், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் டி பிராங் தலைமையிலான தனிப்படையினர் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், புவனேஸ்வர், கிஷோர், சஞ்சய், அருண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்ததில், மடிப்பாக்கத்தில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டதாகவும், இதில் சோழவரம், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான முத்து சரவணன் (31) என்பவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து முத்து சரவணனை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் கீழ்கட்டளை பகுதியில் முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலை சம்பவம் குறித்து முத்துசரவணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்