நாடுகாணி -தேவாலா அட்டி சாலையில் ஆபத்தான பள்ளங்களால் அதிகரிக்கும் வாகன விபத்துகள்

ஆபத்தான பள்ளங்களால் நாடுகாணி- தேவாலா அட்டி சாலையில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையோரம் தடுப்பு சுவர்கள் கட்டி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-04-27 17:09 IST
கூடலூர்


ஆபத்தான பள்ளங்களால் நாடுகாணி- தேவாலா அட்டி சாலையில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையோரம் தடுப்பு சுவர்கள் கட்டி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான பள்ளங்கள்

கூடலூர் தாலுகா நாடுகாணி பெட்ரோல் நிலையம் பகுதியில் இருந்து வலதுபுறம் அட்டி வழியாக தேவாலாவுக்கு தார் சாலை செல்கிறது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை அட்டி, பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் உள்பட ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி, சுகாதார நிலையம், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதுதவிர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு ஏராளமான மக்கள் நாடுகாணி வழியாக கூடலூருக்கு சென்று வருகின்றனர். இதேபோல் பள்ளிக்கூடம், கல்லூரி மாணவ- மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து செல்கின்றனர். இதுதவிர ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலையோரம் முக்கிய இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது.

வாகன விபத்துகள் அதிகரிப்பு

இதனால் இரவில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகிறது. இதேபோல் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் விபத்துகளில் சிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் ஆபத்தான பள்ளங்களை மூடி சாலையோரம் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டுமென சம்பந்தப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்கு பலமுறை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆபத்தான பள்ளங்களால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
அட்டி உள்பட சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கூடலூருக்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் உள்ளதால் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிபட முடியாத நிலையுள்ளது. இது தவிர அரசு தேயிலைத் தோட்டக் கழகம் உள்ளதால் பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன் இயக்கப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் பாதுகாப்பற்ற முறையில் வீடு திரும்புகின்றனர். எனவே ஆபத்தான பள்ளங்களை மூடி தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்