108 ஆம்புலன்சுகளை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
108 ஆம்புலன்சுகளை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட உறுப்பினர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், கடந்த 9 ஆண்டுகளாக பணி வழங்காத திருவள்ளூர் மாவட்ட பெண் தொழிலாளருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கியுள்ள 108 ஆம்புலன்சுகளில், நாள்தோறும் பல ஆம்புலன்சுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கும் தனியார் நிர்வாகத்தின் சேவை விரோத செயலைக் கைவிட்டு, அனைத்து ஆம்புலன்சுகளையும் 24 மணி நேரமும் முழுமையாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு 2021-ம் ஆண்டுக்கு வழங்கிய 16 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை, பேறுகால விடுப்பு, மருத்துவ விடுப்பு எடுத்த தொழிலாளர்களுக்கு வழங்காமல், சட்ட விரோதமாக பிடித்தம் செய்துள்ளதை வழங்க வேண்டும். கரூர், நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்ட தொழிலாளர்களின் சட்டவிரோத பணி நீக்கத்தை கைவிட்டு, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பணியிட மாறுதலில் சென்று, நீண்ட காலமாக சொந்த மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்காத தொழிலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் சங்கர், உறுப்பினர் கோபிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.