கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிள் திறக்கப்படும்; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கொரோனா பரவல்
இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது நாட்டில் கொரோனா 4-வது அலைக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் கொரோனா 4-வது அலை பாதிப்பு அதிகமாக இருக்கும் சில நிபுணர்கள் கூறியுள்ளனர். கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது. இங்கு தினசரி 30 என்ற அளவில் ஏற்பட்டு வந்த வைரஸ் தொற்று 60-ஐ தாண்டியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வதந்திகளை நம்பக்கூடாது
இந்த நிலையில் கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தொடங்கும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் இந்த பள்ளிகளை திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டின் கல்வி ஆண்டு திட்டமிட்டப்படி வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கப்படும். இதில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம். வதந்திகளை பெற்றோர் மற்றும் குழந்தைகள் நம்பக்கூடாது. பள்ளிகளை திறக்கும் முன்பு சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பு செயல்படை வழங்கும் வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.