மகாமாரியம்மன் கோவில் சப்பர தேரோட்டம்
மகாமாரியம்மன் கோவில் சப்பர தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் எடத்தெரு மற்றும் கடைத்தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அன்ன வாகனம், ரிஷப வாகனம், பூப்பல்லக்கு, மாவிளக்கு பூஜையும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் திருவீதி உலா, பொங்கல் வழிபாடு, அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் சீர் எடுத்தல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான சப்பர தேரோட்டம் நடந்தது. அப்போது வேப்பிலை கரகம், சிலம்பாட்டம் மற்றும் கத்தி சுற்றுதல், வாள் சுழற்றுதல், கரணம் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. சப்பரத்தேர் தெற்குத்தெரு, மேற்கு வானொலித்திடல், கடைவீதி, சிவன் கோவில், சர்ச் மற்றும் செக்கடித்தெரு வழியாக வந்து இரவு 7.30 மணி அளவில் நிலையை அடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள்நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.