கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு விரைவில் அரசிதழில் வெளியாகும்; பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு விரைவில் அரசிதழில் வெளியாகும் என பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் இடையே பிரச்சினை உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனால் அந்த தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. மத்திய அரசு விரைவில் கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயாப்புரா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அந்த தீர்ப்பு இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. மத்திய அரசு இன்னும் 2, 3 மாதங்களில் அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அரசிதழில் தீர்ப்பு வெளியானதும், கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். அந்த திட்ட பணிகளும் தொடங்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.