காதல் திருமணம் செய்த வாலிபரின் வீட்டை சூறையாடிய பெண் வீட்டார்
கோலார் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீட்டை, பெண் வீட்டார் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
காதல் திருமணம்
கோலார் தாலுகா வேம்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருக்கு, அதேபகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்படி 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர்.
இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி காதல் ஜோடி பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெண் வீட்டார் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடும்படி சிந்துவை கண்டித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி முனிராஜ், சிந்துவை யாருக்கும் தெரியாமல் வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பெண் வீட்டார் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள், காதல் திருமணம் செய்து மகளை தங்களிடம் இருந்து பிரித்த முனிராஜை பழி வாங்க திட்டமிட்டனர்.
வீடு சூறையாடல்
இந்த நிலையில் நேற்று முனிராஜின் வீட்டிற்கு சிந்துவின் பெற்றோர், உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து உள்ளே இருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் வீட்டு முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தினர். சில பொருட்களை வெளியே எடுத்து வந்து அதற்கு தீ வைத்து எரித்துவிட்டு சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் முனிராஜ், அவரது மனைவி சிந்து இல்லையென கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடப்பதையும், அடித்து நொறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் அவர்களுக்கு, சிந்துவின் பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை சூைறயாடி சென்றது தெரியவந்தது.
பரபரப்பு
இதுகுறித்து முனிராஜ், வேம்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.