பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் கோனேரிப்பட்டி கதவணை

தேவூர்அருகே கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த பகுதி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதனால் 15 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-26 20:51 GMT
தேவூர்:-
தேவூர்அருகே கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த பகுதி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதனால் 15 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கதவணைகள்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் செக்கானூர் நீர்மின் தேக்க கதவணை, நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் தேக்க கதவணை, கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை, ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணை, உள்ளிட்ட பகுதிகளை கடந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாய்ந்தோடுகிறது.
இதில் கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தினமும் 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடும் போது, 20 மெகாவாட் வரையிலும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
இந்த நிலையில் ஆண்டுதோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் 18 மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இதனையடுத்து தற்போது தேவூர் அருகே கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களுக்கு நடைபெறுவதால் கடல் போல் தேங்கி இருந்த காவிரி ஆற்றின் நீர் தேக்கப்பகுதி தற்போது தண்ணீரின்றி பாறை திட்டுகளாக மாறி காட்சி அளிக்கிறது, 
மின் உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணி நடைபெறுவதால் கோனேரிப்பட்டி கதவணை பகுதியில் தினமும் நடைபெற்ற  15 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க பகுதிகளான கோனேரிப்பட்டி படித்துறை, ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, சிலுவம்பாளையம், கோட்டமேடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடல் போல் தேங்கி இருந்த காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. 

மேலும் செய்திகள்