மேலும் ஒருவர் கைது
செல்போன் கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
பனமரத்துப்பட்டி:-
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அபுபக்கர்சித்திக் (வயது 32). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்க முடிவு செய்தார்.அப்போது தனது நண்பர் அண்ணாதுரை மூலம் மதுரை மாவட்டம் கே.புதூர் ராமலட்சுமண நகரை சேர்ந்த அரவிந்த் என்கிற சக்திவேல் (49) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னிடம் உள்ள 200 கிராம் தங்கக்கட்டிகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி அபுபக்கர் சித்திக்கை சேலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர் சித்திக் ரூ.10 லட்சத்துடன். மல்லூர் அருகே உள்ள பொய்மான்கரடு பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அரவிந்த் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அபுபக்கர் சித்திக்கை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது வழியில் காரில் வந்த 3 பேர் சுங்க அதிகாரிகள் என்று கூறி, ரூ.10 லட்சத்தை பறித்தனர்.
இதனிைடயே அவரை அழைத்து வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நூதன மோசடி குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த்தை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு உடைய கருப்பூர் டால்மியா போர்டு பாரதி நகரை சேர்ந்த டிரைவர் பாலு என்கிற பாலசுப்ரமணியை (45) தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.