2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
சேலம்:-
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பணம் பறிப்பு
சேலம் லீபஜார் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி லீபஜாருக்கு சென்று டீத்தூள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கினார். பின்னர் கடைக்கு வந்து கொண்டிருந்த போது அவரை 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 29), சேலம் லைன்மேட்டை சேர்ந்த சாதிக்பாஷா (28) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சம்பத்திடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து 2 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் இருவரும் தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். சேலம் சிறையில் உள்ள 2 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.