உலக அமைதிக்காக மதுரை தம்பதி சைக்கிள் பயணம்

உலக அமைதிக்காக மதுரை தம்பதி சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

Update: 2022-04-26 20:19 GMT
குளித்தலை, 
மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பங்களா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 51). இவர் அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி சித்ரா (53), அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு மகளிர் பிரிவு செயலாளராக இருக்கிறார். இந்த தம்பதி பல்வேறு பொதுநல நோக்கத்திற்காக இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாளர் என்கிற விருதை பெற்றவர்கள்.
இந்த தம்பதியினர் இது போன்ற பொதுநல பயணத்தை மேற்கொள்ளும்போது ஏற்பட்ட விபத்தில் சித்ரா பாதிக்கப்பட்டு அவரால் சரிவர நடக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மூன்று சக்கர சைக்கிளில் தனது கணவருடன் சேர்ந்து பொதுநல யாத்திரையில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கருப்பையா சைக்கிளிலும், அவரது மனைவி சித்ரா மூன்று சக்கர சைக்கிளிலும் தங்கள் பயணம் குறித்த பதாகையை பொருத்திக்கொண்டு தேசியக்கொடியுடன் நேற்று குளித்தலை பகுதிக்கு வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
உலக நாடுகளில் போர் இன்றியும், 3-ம் உலகப் போர்கள் தொடராமல் இருக்கவும், உலக அமைதி, சமாதானம், ஒற்றுமை நிரந்தரமாக நிலவ வேண்டி கோவை மாவட்டத்தில் உள்ள பேரூரில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கி 550 கிலோ மீட்டர் பயணம் செய்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆரோவில் வரை சைக்கிளில் யாத்திரை செல்ல உள்ளோம். கடந்த 12-ந் தேதி தொடங்கிய எங்கள் யாத்திரை பயணம் 40 நாட்களை கடந்து வரும் மே மாதம் 21-ந் தேதி பயண தூரத்தை முடிக்க உள்ளோம் என்றனர். இந்த தம்பதியினர் இந்தியா முழுவதும் பல்வேறு பாதை வழியாக பாதயாத்திரை மற்றும் சைக்கிள் யாத்திரையாக செய்து சுமார் 96 ஆயிரம் கிலோமீட்டர் சென்றுள்ளனர். கருப்பையா 33 ஆண்டுகளாகவும், அவரது மனைவி சித்ரா 22 ஆண்டுகளாகவும் தங்களுடைய யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் முழுமையாக கடந்து யாத்திரை மேற்கொள்ளும் பட்சத்தில் இவர்களுக்கு லிம்கா மற்றும் கின்னஸ் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்