கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்
லாலாபேட்டை அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.;
கிருஷ்ணராயபுரம்,
இருதரப்பினர் இடையே மோதல்
லாலாபேட்டை அருகே உள்ள புணவாசிபட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கடைசி நாளான நேற்று மாவிளக்கு, மஞ்சள் நீராட்டு, சாமி குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு தரப்பினர் மாவிளக்கு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது கட்சிக்கொடியை பிடித்து வந்ததாக தெரிய வருகிறது.
மற்றொரு தரப்பினர் கோவிலுக்கு வரும் பொழுது கட்சிக்கொடி எதற்கு என்று கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் குவிப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி, குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.