கரூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரங்களை தூர்வார ரூ.2¾ கோடி நிதி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரங்களை தூர்வார ரூ.2¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-26 19:49 GMT
கரூர்,
கலெக்டர் ஆய்வு
கரூர் மாவட்டம், வெள்ளியணை மடையப்பன் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வெள்ளியணை வரத்துவாரி மற்றும் வெள்ளியணை கழிவுநீர் உபரி வடிகால் வாரியை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் மற்றும் நீர் ஆதாரங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்து உள்ளார்.
ரூ.2¾ கோடி நிதி ஒதுக்கீடு
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேத பாதிப்பினை கருத்தில் கொண்டு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பாசன காலத்திற்கு முன்பாகவே அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்கு உரிய பாசன நீரினை கடைமடை வரை செல்லும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரங்கள் தூர்வார ரூ.2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
இதில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் மூலம் 15 பணிகள் 120.47 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலும், அரியாறு வடிநிலக் கோட்டம் மூலம் 4 பணிகள் 14.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
கழிவுநீர் உபரி வடிகால்
அந்த வகையில் வெள்ளியணை மடையப்பன் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வெள்ளியணை குளத்துக்கு நீர் செல்லும் வெள்ளியனை வரத்து வாரியை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வெள்ளியணையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 11 கி.மீ. தூரத்திற்கு கழிவு நீர் உபரி வடிகால் வாரியையும் துர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்