சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-04-26 19:36 GMT
கரூர், 
டிரைவர்
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 29), டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கினார். அதில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 மாதங்களுக்குள் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின்படி அதிகபட்ச தண்டனையான 10 ஆண்டுகள் சிறை தண்டனையை பிரான்சிஸ் சேவியர் அனுபவிப்பார். தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்