ரூ.3 கோடி அபராதம்
மதுரை-நத்தம் மேம்பால விபத்து தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை,
மதுரை-நத்தம் மேம்பால விபத்து தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விபத்து அறிக்கை
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாரத்மாலா பரிஜோனா திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி செலவில் மதுரை-நத்தம் இடையே நான்குவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நான்குவழிச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் நாகனாகுளம் வரை உள்ள 7.3 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலத்திற்காக மொத்தம் 189 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன..
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி, இந்த மேம்பால பணிகளின் போது மதுரை நாராயண புரத்தில் மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்திரபிரதேச தொழிலாளி ஒருவர் பரிதாப மாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தமிழக அரசு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது.
இந்த குழுவினர், அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். அதில் மேம்பாலத்தின் இருபகுதிகளை இணைக்கும் பணியின் போது ைஹட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
90 சதவீத பணிகள்
இதற்கிடையில் மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியது. அந்த அறிக்கையின்படி என்ஜினீயர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த மேம்பால பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வரும் மும்பையை சேர்ந்த ஜே.எம்.சி. நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் திட்ட அறிக்கையை தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த நான்குவழிச்சாலை பணிகள்மிக வேகமாக நடந்து வருகின்றன. மேம்பால கட்டுமான பணிகள் சுமார் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்து விட்டன. இன்னும் 5 மாததிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தெரிகிறது.