ரெயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-26 18:47 GMT
ஜோலார்பேட்டை

சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு படை போலீசார் சேலம் ரெயில் நிலையம் முதல் காட்பாடி ரெயில் நிலையம் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சேலம் முதல் காட்பாடி வரை ராமன், கண்ணன், சக்திவேல், கவியரசு, சென்ன கேசவன் ஆகியோரை கொண்ட ரெயில்வே சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.

 நேற்று அதிகாலை 3-30 அளவில் ரெயில் ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கும் இடையே வந்துகொண்டிருந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-3 பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா கடத்திய நபர் குறித்து சிறப்பு தனிப்படை பிரிவினர் அப்பெட்டியில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர் பற்றி துப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து சேலம் ரெயில்வே சிறப்பு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்