நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதூர் குடியான் வட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு பழுதாகி ேபானது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி செல்லும் சாலையைக் கடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு சாலையைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் புதூர் குடியான் வட்டம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார்,
அக்ராகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 நாளில் குடிநீர் கிைடக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.