கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணலில் என்ஜினீயர்கள் உள்பட 600 பேர் குவிந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியை தகுதியாக கொண்ட இப்பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் வரை சுமார் 3,100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கான நேர்காணல் வாணியம்பாடி சாலையில் உள்ள திருப்பத்தூர் கால்நடைதுறை அலுவலகத்தில் நடந்தது. மண்டல கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் நாசர் முன்னிலை வகித்தார், மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட நேர்காணல் கண்காணிப்பு அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.
நேர்காணில் கலந்து கொண்டவர்களுக்கு தனித்தனியாக மாடுகளை கையாளுதல், சைக்கிள் ஒட்டி காட்டுதல், பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளித்தல் ஆகியவை நடந்தது. தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. முதல் நாள் நேர்காணலுக்கு 600 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்னும் 4 நாட்கள் நடத்தப்பட்டு ஒரு மாதத்ததில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேர்காணலில் கலந்து கொள்ள ஒரே இடத்தில் 600-க்கும் மேற்பட்டோர் திரண்டதும், அவர்கள் மாடுகளை கையாள்வதும், சைக்கிள் ஒட்டுவது போன்ற செயல்களை சாலையில் சென்றவர்கள் பார்த்தவண்ணம் சென்றதால் அப்பகுதி நேற்று பரபரப்பாக காட்சி அளித்தது.