முத்துமாரியம்மன் கோவில்களில் திருவிழா: பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
முத்துமாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆவூர்:
முத்துமாரியம்மன் கோவில்
விராலிமலை தாலுகா, பேராம்பூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் மண்டகப்படிதாரர்கள் சார்பில், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்று காலை பேராம்பூர் சாத்திவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிசட்டி, முளைப்பாரி ஆகியவற்றை எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை கோவில் முன்பு கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராம்பூர் சாத்திவயல் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
ஆதனக்கோட்டை
இதேபோல மாந்தாங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி, அலகு குத்தியும், கரும்பால் தொட்டில் கட்டியும், கரகம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் மாந்தாங்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணமேல்குடி
மணமேல்குடி அருகே தளிக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவான இன்று விரதம் இருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தளிக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.
பூச்சொரிதல் விழா
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையொட்டி ஆலங்குடி படேல் நகரிலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் பூக்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று பூக்களை அம்மன் முன்பு கொட்டி சாமி தரிசனம் செய்தனர்.