கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-04-26 18:18 GMT
மதுரை, 
மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு தெய்வராஜ், அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். கணேசன், லெனின், உதயநாதன், செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறும் போது, நாடு முழுவதும் மொத்தம் 742 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 51 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதன்மூலம் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.140 கோடி வரை தினமும் வசூலிக்கப் படுகிறது. அரசின் விதிப்படி மாநகராட்சி மற்றும் நகராட்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் வெளியே தான் சுங்கச்சாவடிகள் இருக்க வேண்டும். 
ஆனால் சென்னையில் மாநகராட்சி எல்லையிலேயே 5 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதே போல் திருமங்கலம் நகராட்சியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளன. இதுபோன்று விதிகளை மீதி தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக கப்பலூர் சுங்கச்சாவடியால் மதுரை மாவட்ட மக்களுக்கு அதிகஅளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். அதே போல் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் இதே கோரிக்கையினை வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றும் அளித்தனர்.

மேலும் செய்திகள்