விராலிமலையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி தள்ளியதில் 35 பேர் காயம் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்
விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 35 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
விராலிமலை:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி விளியம்பூர் குளத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.
642 காளைகள் சீறிப்பாய்ந்தன
இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 206 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் களத்தில் நின்று வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 642 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
35 பேர் காயம்
காளைகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 காளைகளும் காயமடைந்தன.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் வெள்ளி நாணயம், ரொக்க பரிசு, சைக்கிள், கட்டில் மற்றும் சிறப்பு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை அள்ளிச்சென்றனர்.
கண்டுகளித்தனர்
ஜல்லிக்கட்டை வருவாய்த்துறை, கால்நடை துறை, மருத்துவத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, கரூர், விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.