பாலக்கோட்டில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
பாலக்கோட்டில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு மற்றும் தர்மபுரி-ஓசூர் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட், மிட்டாய் வகைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையில் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கடைகளில் கலப்பட தேயிலை பாக்கெட்கள், வத்தல், காலாவதியான, உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத மிக்சர் பாக்கெட்கள், மிட்டாய்கள், பிஸ்கெட்கள், பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடையில் உரிய கம்பெனி லேபிள், தயாரிப்பு முடிவு தேதி இல்லாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.