சின்ன தக்கேப்பள்ளியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
சின்ன தக்கேப்பள்ளியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.;
கிருஷ்ணகிரி:
சின்ன தக்கேப்பள்ளியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
மகாபாரத திருவிழா
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன தக்கேப்பள்ளி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா கடந்த 6-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பெரிய தக்கேப்பள்ளி, பெரிய கோட்டப்பள்ளி உள்ளிட்ட 12 கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த திருவிழாவின் போது தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் கிருஷ்ணகிரி செல்வ விநாயகா நாடக கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தினர்.
இறுதி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரவுபதி அம்மன் கோவில் எதிரே சுமார் 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவபொம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தெருக்கூத்து கலைஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறுதியில் பீமனும், அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் நடத்தப்பட்டு இறுதியில் துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ஆரவாரம்
இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு இருந்த திரவுபதி அம்மன் தேர் துரியோதனன் உடல் மீது வைத்து திரவுபதி சப்தம் நிறைவேறும் வகையில் துயில் முடியும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து துரியோதனன் உடலின் மீது ஏறி மிதித்து படுகளமும் செய்தனர். இந்த துரியோதனன் படுகளம் செய்யும் போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரதம் திருவிழா நிறைவு பெற்றது. இதை 12 கிராமமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.