108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகிய பெண் குழந்தை பிறந்தது
மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
மன்னார்குடி:-
மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
கர்ப்பிணி பெண்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள முன்னாவல்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதவன். விவசாயி. இவருடைய மனைவி திவ்யா (வயது23). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில் திவ்யாவை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காளாஞ்சிமேடு என்ற பகுதி அருகே திவ்யாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. வலியால் அவர் துடிதுடித்து உள்ளார்.
பெண் குழந்தை பிறந்தது
இதையடுத்து ஆம்புலன்சை அதன் டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். அப்போது ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் முரளி பிரசவம் பார்த்தார். இதில் திவ்யாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர்.
பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.