கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Update: 2022-04-26 17:32 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்தார். இதில் அவரது பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நிகழ்வுகளை அவர் பதிவிட்டு வந்தார். இந்த டுவிட்டர் கணக்கை கலெக்டரின்  நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் மாவட்ட கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் ஒன்று பதிவிடப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கலெக்டரின் டுவிட்டர் கணக்கை யாரோ மர்ம நபர் ஹேக் செய்துவிட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது. பின்னர் மாலை 5 மணியளவில் அந்த விளம்பரம் டுவிட்டர் கணக்கில் இருந்து அகற்றப்பட்டது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது கலெக்டரின் டுவிட்டர் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை. வழக்கமான நிகழ்வுகள் அதில் வந்து கொண்டு தான் இருந்தது. இடையில் கிரிப்டோ கரன்சி என்ற விளம்பரம் அதில் தவறுதலாக வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பதிவிட்ட மர்ம நபர் யார்? என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்