ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி அபேஸ்
கருங்கல் பஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் பஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஓய்வு பெற்ற ஆசிரியை
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் தக்காளிவிளையை சேர்ந்தவர் பரமானந்தம். இவருடைய மனைவி லில்லிஜாய் (வயது81). ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் நேற்று முன்தினம் காலையில் ஓய்வூதிய பணம் எடுப்பதற்காக கருங்கல் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கருங்கல் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
தாலி சங்கிலி பறிப்பு
அவர் செல்ல வேண்டிய பஸ் வந்ததும் அதில் ஏற முயன்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் லில்லிஜாய் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
பஸ்சில் ஏறிய பின்பு தாலி சங்கிலி பறிக்கப்பட்டிருப்பதை கண்டு லில்லிஜாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் நகையை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்கணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.