ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

மன்னார்குடி அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-26 19:00 GMT
மன்னார்குடி:-

மன்னார்குடி அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பிடாரி ஏரி 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் 95 ஏக்கர் பரப்பளவில் பிடாரி ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியை ஆண்டு தோறும் கிராம மக்கள் ஏலம் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரபு என்பவர் ஏரியை ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். தற்போது மீன்கள் நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருந்தன. 
ஏரியின் கரைப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் நீர் தேவைக்காக ஏரியில் உள்ள நீரை இரைக்காமல் வைத்திருந்து, அடுத்த 2 மாதங்களுக்கு பிறகு மீன் பிடித்துக்கொள்ள திட்டமிட்டிருந்தனர். 

செத்து மிதந்த மீன்கள்

இந்த நிலையில் நேற்று காலை பிரபு ஏரிக்கு வந்து பார்த்தபோது அதில் உள்ள நீரில் மீன்கள் செத்து மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நீரின் அடி ஆழத்தில் வசிக்கும் மீன்களும் மயங்கிய நிலையில் கரை ஒதுங்க தொடங்கியது.
கெண்டை, விரால், சிலேப்பி என பல வகையான மீன்கள் செத்து கிடந்தன. இதுகுறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் ஏரிக்கரையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கிராமப்பகுதியில் கால்நடைகளை ஏரி பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என ‘தண்டோரா’ மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து ஏரியை ஏலம் எடுத்த பிரபு மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில் மர்ம நபர்கள் ஏரியில் விஷம் கலந்ததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் இறந்து விட்டதாகவும், ஏரியில் விஷம் கலந்தது யார்? என்பது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். அதன்பேரில் ஏரி தண்ணீரின் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்