வள்ளத்தில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
குளச்சல் அருகே மீன்பிடிக்க சென்றபோது வள்ளத்தில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.
குளச்சல்:
குளச்சல் அருகே மீன்பிடிக்க சென்றபோது வள்ளத்தில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.
மீனவர்
குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் ததேயூஸ் மகேஷ் (வயது48), மீனவர். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
ததேயூஸ் மகேஷ் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலையில் ததேயூஸ் மகேஷ் உள்பட 5 மீனவர்கள் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.
கடலில் தவறி விழுந்தார்
அவர்கள், குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ததேயூஸ் மகேஷ் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்தார். இதைகண்ட சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் கடலுக்குள் குதித்து ததேயூஸ் மகேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ததேயூஸ் மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டு அங்கிருந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
சோகம்
இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று ததேயூஸ் மகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வள்ளத்தில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலியான சம்பவம் குறும்பனை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.