பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
டீசல், ஆயில் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
சுல்தான்பேட்டை
டீசல், ஆயில் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
வேலைநிறுத்த போராட்டம்
பொக்லைன் எந்திரம் நிலத்தை சமப்படுத்துதல், குழி தோண்டுதல், மண் அள்ளுதல் என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டீசல், ஆயில், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் உள்ளிட்டவை உயர்வு காரணமாக பொக்லைன் எந்திரம் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் போதிய வருமானம் இல்லாததால் பொக்லைன் உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே டீசல், ஆயில் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து சுல்தான்பேட்டையில் பொக்லைன் உரிமையாளர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பொக்லைன் எந்திரங்கள் அந்த பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொக்லைன் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் வள்ளி கனகராஜ் கூறியதாவது:-
டீசல் உயர்வை கண்டித்து
டீசல், ஆயில் மற்றும் பொக்லைன் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, டீசல் விலையை அடிக்கடி உயர்த்தக் கூடாது என அரசை வலியுறுத்தியும், டீசல் தொடர் உயர்வை கண்டித்தும் இன்று (நேற்று) முதல் சுல்தான்பேட்டையில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் உள்ளோம்.
மேலும் ஜல்லிப்பட்டி, திருப்பூர், பல்லடம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விரைவில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.