ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-04-26 17:07 GMT
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுமாப்பிள்ளை

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள பொகளூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 21). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தென்காசியை சேர்ந்த பாஸ்கரன் (35) என்பவர் பொகளூரில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். மகேஷ்குமாரும், பாஸ்கரனும் நண்பர்களாக பழகி வந்தனர். 

2 பேர் பலி

இந்த நிலையில் மகேஷ்குமார், பாஸ்கரன் நேற்று வேலை காரணமாக ஸ்கூட்டரில் மேட்டுப்பாளையம் வந்தனர். பின்னர் வேலை முடிந்து அவர்கள் பொகளூருக்கு திரும்பினர். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் தாளத்துறை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மகேஷ்குமார், பாஸ்கரன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 15-வது நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்