சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்;
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தேர்வில் முறைகேடு
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலபுரகி டவுன் பழைய ஜேவர்கி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் அந்த பள்ளியின் உரிமையாளரும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான திவ்யா ஹகரகிக்கு உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தற்போது திவ்யா, என்ஜினீயரான மஞ்சுநாத் உள்பட 6 பேர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல் என்கிற ஆர்.டி.பட்டீல் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ருத்ரேகவுடா பட்டீல் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற வைக்க ரூ.40 முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கியது தெரியவந்தது.
கைது
இந்த நிலையில் ருத்ரேகவுடா பட்டீலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கல்யாண-கர்நாடக பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியவர்களில் 50 பேரை விசாரணைக்கு ஆஜராக சி.ஐ.டி. நோட்டீசு அனுப்பி இருந்தது. இதில் சுனில்குமாரும் அடங்குவார். அதன்படி நேற்று முன்தினம் சுனில்குமார் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் கொண்டு வந்த ஓ.எம்.ஆர். சீட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த போது அதில் தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது தேர்வில் முறைகேடு செய்ததை சுனில்குமார் ஒப்புக்கொண்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ருத்ரேகவுடா பட்டீலிடம் ரூ.40 லட்சம் கொடுத்ததாகவும் அவர் கூறி இருந்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தங்களது காவலில் எடுத்தனர். கைதான சுனில்குமார் பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யாவின் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் ஆவார். இந்த நிலையில் நேற்று சுனில்குமாரை கலபுரகியில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த சி.ஐ.டி. போலீசார், கலபுரகியில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.