போலீஸ் நிலையத்தில் நவ்நீத் ரானா எம்.பி. தவறாக நடத்தப்படவில்லை- உள்துறை மந்திரி தீலிப் வால்சே பாட்டீல் விளக்கம்

போலீஸ் நிலையத்தில் நவ்நீத் ரானா தவறாக நடத்தப்படவில்லை என உள்துறை மந்திரி தீலிப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார்.;

Update: 2022-04-26 16:56 GMT
படம்
மும்பை, 
போலீஸ் நிலையத்தில் நவ்நீத் ரானா தவறாக நடத்தப்படவில்லை என உள்துறை மந்திரி தீலிப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார்.
நவ்னீத் ரானா புகார்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக கூறி 2 பிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக கடந்த சனிக்கிழமை பெண் எம்.பி. நவ்னீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 
இதில் போலீஸ் காவலில் இருந்த போது போலீசார் குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என நவ்நீத் ரானா மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் போலீசார் தன்னை சரியாக நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் நவ்நீத் ரானா போலீஸ் நிலையத்தில் உட்கார்ந்து டீ குடிக்கும் வீடியோவை மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே பகிர்ந்து இருந்தார். சஞ்சய் பாண்டே பகிர்ந்த வீடியோ சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டது, கார் போலீஸ் நிலையத்தில் நடந்தது அல்ல என நவ்நீத் ரானாவின் வக்கீல் கூறியுள்ளார்.
உள்துறை மந்திரி விளக்கம்
இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் நவ்நீத் ரானா தவறாக நடத்தப்படவில்லை என மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் போலீசார் தன்னை தவறாக நடத்தியதாக நவ்நீத் ரானா அளித்த குற்றச்சாட்டு குறித்து நான் தனிப்பட்ட முறையில் விசாரித்தேன். இதில் அவரது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் எதையும் நான் கண்டறியவில்லை. உண்மையை சொல்லப்போனால் அதுபோன்ற ஒரு சம்பவம் போலீஸ் நிலையத்தில் நடக்கவே இல்லை. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த விவகாரம் குறித்து அவர் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்து இருப்பதால் இதற்கு மேல் நான் எதுவும் கூறமுடியாது. சபாநாயகர் எங்களிடம் தகவல் கேட்டு இருக்கிறார். நாங்கள் அவருக்கு அனுப்பி வைப்போம்.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்