மயிலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
மயிலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள, செண்டூரை சேர்ந்தவர் ராஜாராம் மகன் ஆனந்தசெல்வன் (வயது 38). இவர் நேற்று தனது நிலத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஆனந்த செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் விளங்கம்பாடி பகுதியில் சென்னை -திருச்சி சாலையில் ரோந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரித்தனர்.
அதில், அவர் சென்னை புளியந்தோப்பு 5-வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சரத்குமார் (20) என்பதும், ஆனந்த செல்வனிடம் கத்திமுனையில் செல்போன் பறித்து சென்றதும் தெரியவந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார் சரத்குமாரை கைது செய்தனர்.