‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விதிமீறலால் விபத்து அபாயம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் சில வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் எதிரே வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் சாலையை குறுக்காக வேகமாக கடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், திண்டுக்கல்.
மரத்தை பாழாக்கும் இரும்புவடம்
உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றின் கரையில் ஞானாம்பிகை கோவில் படித்துறையில் பழமையான அரசமரம் உள்ளது. ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து செல்லும் குழாய்களை இரும்பு வடம் மூலம், அந்த அரசமரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. இரும்புவடம் மரத்திற்குள் பதிந்து விட்டது. இதனால் மரம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மரத்தில் கட்டி இருக்கும் இரும்புவடத்தை அகற்ற வேண்டும்.-செந்தில், உத்தமபாளையம்.
குப்பைகள் தீவைத்து எரிப்பு
திண்டுக்கல் மாநகராட்சி பின்னால் உள்ள சாலையின் ஓரத்தில் பொதுப்பணி துறை அலுவலகம் அருகே தினமும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும். -ராஜா, திண்டுக்கல்.
இடிந்து விழுந்த பாலம்
சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியில் சாக்கடை கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்து விட்டது. இதனால் வாகன போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயில் விரைவாக பாலத்தை கட்ட வேண்டும். -தனபால், வீரசின்னம்பட்டி.