விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நேற்று காலை திடீரென மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள் தாங்கள் கொண்டு வருகிற விளைபொருள்களை மாற்ற தேவையான சாக்கு விற்பனை கூடத்தில் இல்லை. இதனால், சாக்குகளை திரும்ப பெற்று செல்ல நீண்டநேரம் நாங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே சாக்குகள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மோகன் உறுதி கூறினார்.
பணப்பட்டுவாடா
முன்னதாக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருள்களுக்கு பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்தால் அதை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது. வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், கூட்டுறவுதுறை இணை பதிவாளர் யசோதாதேவி, நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, விற்பனை கூட செயலாளர் கண்ணன், மேற்பார்வையாளர் ஜாக்குலின் மேரி, தாசில்தார் இளவரசன், வருவாய் ஆய்வாளர் சார்லின், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்பாண்டியன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள் பலர் உடனிருந்தனர்.