அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

கருங்கண்ணி, தேவூரில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-26 16:18 GMT
வேளாங்கண்ணி:
கருங்கண்ணி, தேவூரில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
 கீழ்வேளூர் வட்டம் கருங்கண்ணி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியின் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
அதைத்தொடர்ந்து செடில் உற்சவம் நடந்தது. பின்னர் நேற்று மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருமாரியம்மன்   வீதி உலா நடந்தது. இதில் கருங்கண்ணி, மேலபிடாகை மீனம்பநல்லூர் களத்திடல்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வீதி உலா சென்றது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
செல்லமுத்துமாரியம்மன் கோவில்
 கீழ்வேளூர் அருகே தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது.  இதையொட்டி  மணிமண்டபத்தில்  செல்ல முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி  அருள் பாலித்தார்.
 அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
---

மேலும் செய்திகள்