சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம் அகற்றப்படுமா?
பொரவச்சேரி ஊராட்சியில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
சிக்கல்:
பொரவச்சேரி ஊராட்சியில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி, குற்றம்பொருத்தானிருப்பு பகுதியில் சிக்கல்-பெருங்கடம்பனூர் இடையே செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குற்றம்பொருத்தானிருப்பு மேலத்தெரு பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த மின்கம்பம் மூலம் சங்கமங்கலம், பெருங்கடம்பனூர் பகுதிக்கு மின்கம்பிகள் செல்கின்றன. இந்த மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இந்த வழியாக பெருங்கடம்பனூர், நாகூர், சங்கமங்கலம், சிக்கல், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர்.
அகற்ற வேண்டும்
இந்த மின்கம்பம் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்துடன் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.