விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயன்கள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயன்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-26 16:13 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பின் பயன்கள் குறித்து கிராமப்  பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.


விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறுகட்டமைப்பு பணி

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மைக்               குழுவானது ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. 

அதனடிப்படையில், மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணிகள் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மாணவர்களின் முன்னேற்றம்

இவ்வாறு நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பின் செயல்பாடு, அதன் பயன்கள் என்ன என்பதை அந்தந்த கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,  அரசு பள்ளியில் தேர்வு செய்ய உள்ள உறுப்பினர்கள் தங்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் செயலாற்றிட வேண்டும் என்பது குறித்த குறும்படங்கள் தொகுப்பு அடங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பகுதிகளில் மேற்கொள்ளும் வகையில் இந்த வாகனங்கள் 3 நாட்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.


இதன் மூலம் பொதுமக்கள் இதன் பயன்கள் குறித்து நன்கு தெரிந்துகொள்வதுடன் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுப்பினர்களாக பங்கேற்று மாணவ செல்வங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனபால், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்