8 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை- மந்திரி நாராயணகவுடா பேட்டி
கர்நாடகத்தில் 8,000 உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இளைஞர் நலன்-விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
100 பேருக்கு விமானி பயிற்சி
பெங்களூரு ஜக்கூர் விமான பயிற்சி பள்ளியில் 100 பேருக்கு விமானி பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். அங்கு 3 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்பு 36 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அது பாதியில் நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் பயிற்சி வழங்கி முழுமையாக நிறைவு செய்யப்படும்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சி பள்ளியின் ஓடுதளம் சீரமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விளையாட்டு திடல்களை அமைக்க ரூ.504 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 1½ மணி நேரம் விளையாட நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.
விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் 8,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
திறன் அறியும் தேர்வு மையம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விளையாட்டுத்துறைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிக முக்கியத்துவம் வழங்குகிறார். அம்ருத் தத்து திட்டத்தின் கீழ் விளையாட்டில் சிறந்து விளங்கும் 75 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். பழைய குஸ்தி வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரித்துள்ளோம்.
கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் பாதை சேதம் அடைந்துள்ளது. அதை சரிசெய்ய ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துமகூருவில் ரூ.4½ கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் கட்டப்படுகிறது. பெங்களூரு, மண்டியாவில் குழந்தைகள் விளையாட்டு திறன் அறியும் தேர்வு மையம் தொடங்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெண் வீராங்கனைகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
நூல் விலை உயர்வு
நீச்சல் குளம் பராமரிப்பு, விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு-தனியார் பங்களிப்பு திட்டம் அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் இளைஞர் கொள்கை முதன் முறையாக அமல்படுத்தப்படுகிறது. பட்டுக்கூடு விலை அதிகரித்துள்ளது. நூல் விலை உயர்ந்துவிட்டது.
ஐதராபாத், வாரணாசி, சென்னையில் பட்டுநூல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநகரில் நவீன் பட்டு சந்தையை அமைக்க ரூ.141 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.75 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சிட்லகட்டா, ஹரிஹரா, ஹாவேரி மற்றும் கலபுரகியில் நவீன பட்டு சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி நாராயணகவுடா கூறினார்.