மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் தற்கொலை
கம்பத்தில் குடும்ப பிரச்சினையில் மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). கொத்தனார். இவருக்கு திருமணமாகி வினோதினி (21) என்ற மனைவியும், சிவானி (3) என்ற குழந்தையும் உள்ளனர். ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு ஈஸ்வரன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை வினோதினி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் வினோதினி கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஈஸ்வரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஈஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவர் தனது மர்ம உறுப்பை அறுத்து விட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம உறுப்பை அறுத்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.