மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு; முறைகேடுகள் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 102 மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 102 மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
தங்கும் விடுதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 102 அரசு மாணவ- மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதிகள் முறையாக செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. விடுதிகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் முருகேஷ் முடிவு செய்தார்.
அதன்படி 61 உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுவினர் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி போளூரில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திடீர் ஆய்வு
அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 51 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி, 49 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள், 2 சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்கள் இருப்பு விவரம், வருகை பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கல்வித்தரம், கழிவறை வசதி உள்ளதா, குடிநீர் வசதி உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் விடுதி காப்பாளர்களிடம் அரசால் வழங்கப்படும் புத்தகம், சீருடை, உதவித்தொகை, சிறப்பு கையேடுகள் போன்றவை முறையாக மாணவர்கள் பெற்றுள்ளார்களா என்றும் கேட்டறிந்தனர். மாணவர்களிடமும் குறைகள் கேட்கப்பட்டது.
நடவடிக்கை
இந்த ஆய்வில் பல விடுதிகளில் மாணவர்கள் இல்லாததும், வளாகம் தூய்மையாக இல்லாமலும் இருந்தது தெரியவந்தது. மேலும் பெண்கள் விடுதியில் வார்டன் பணியில் இல்லாமலும் இருந்துள்ளனர்.
மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருந்துள்ளது. சில விடுதிகளில் வருகை பதிவேடுகள் முறையாக வைக்கப்படாமலும் உள்ளிட்ட முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இந்த ஆய்வுகள் குறித்த விவரத்தினை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வில் சிக்கிய வார்டன் உள்பட பலர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.