மத்திய உள்துறை அறிக்கை கேட்டுள்ள நிலையில் பெண் எம்.பி. போலீஸ் நிலையத்தில் டீ குடிக்கும் வீடியோ- மும்பை கமிஷனர் வெளியிட்டார்
பெண் எம்.பி. நவ்நீத் ரானா போலீசார் தனக்கு தண்ணீர் கூட குடிக்க தரவில்லை என அளித்த புகார் குறித்து மத்திய உள்துறை உண்மை அறிக்கை கேட்டு உள்ள நிலையில், அவர் போலீஸ் நிலையத்தில் ‘டீ' குடிக்கும் வீடியோவை மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே வெளியிட்டுள்ளார்.
மும்பை,
பெண் எம்.பி. நவ்நீத் ரானா போலீசார் தனக்கு தண்ணீர் கூட குடிக்க தரவில்லை என அளித்த புகார் குறித்து மத்திய உள்துறை உண்மை அறிக்கை கேட்டு உள்ள நிலையில், அவர் போலீஸ் நிலையத்தில் ‘டீ' குடிக்கும் வீடியோவை மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே வெளியிட்டுள்ளார்.
அறிக்கை கேட்ட உள்துறை
அமராவதி சுயேச்சை பெண் எம்.பி. நவ்னீத் ரானா, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்த வழக்கில் கடந்த சனிக்கிழமை கணவர் ரவி ரானாவுடன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் தன்னை சட்டவிரோதமாக கைது செய்த மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் அவர் போலீசார் தனக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். மேலும் தனது பதவியை பொருட்படுத்தாமல் லாக்-அப்பில் அடைத்து வைத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை உரிமை மற்றும் நெறிமுறை கமிட்டி, மத்திய உள்துறையிடம் அறிக்கை கேட்டு இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை பெண் எம்.பி. போலீஸ் நிலையத்தில் மனிதநேயமின்றி நடத்தப்பட்டதாக அளித்த புகார் குறித்து உண்மை அறிக்கையை மராட்டிய அரசிடம் கேட்டு உள்ளது. இதுதொடர்பான தகவலை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
வீடியோ வெளியீடு
இதற்கிடையே மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, “பெண் எம்.பி. நவ்நீத் ரானாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 12 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நவ்நீத் ரானா, கணவருடன் போலீஸ் நிலையத்தில் டீ குடிக்கிறார். மேலும் அவரது அருகில் மினரல் வாட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் நாங்கள் எதையும் கூற வேண்டுமா?” என்ற வாசகத்துடன் பெண் எம்.பி. ‘டீ' குடிக்கும் வீடியோவை கமிஷனர் வெளியிட்டுள்ளார்.
பெண் எம்.பி. தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட வீடியோவை அதிகளவில் நெட்டிசன்கள் ரீடுவிட் செய்து லைக் செய்து வருகின்றனர்.
-------------