கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

Update: 2022-04-26 15:01 GMT
கடலூர், 

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த 21 மாட்டு வண்டி மணல் குவாரியையும், லாரி குவாரியாக மாற்றியதை கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் உடனடியாக வான்பாக்கம், வானமாதேவி, அக்கடவல்லி, கருக்கை, கிளியனூர், கோ.ஆதனூர், கூடலையாத்தூர், ஆதியூர், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிக்கு தனி மணல் குவாரி அமைக்க தர வேண்டும்.
மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது மாட்டு வண்டிக்கு தனி மணல் குவாரி அமைத்து தர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல், இணை செயலாளர்கள் சுப்புராயன், பாபு, துணை தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கோட்டாட்சியர் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளர் ஆனந்த் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தர்ணா

அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோட்டாட்சியர் அல்லது தாசில்தார் வந்து உத்தரவாதம் தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கேட்ட நேர்முக உதவியாளர் ஆனந்த், கோட்டாட்சியர் பண்ருட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு பணிக்கு சென்றிருப்பதால், இது தொடர்பாக மாலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
இதை கேட்டதும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மாலையில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தாலுகாவுக்கு ஒரு இடத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட கோட்டாட்சியர், இது பற்றி கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் மணல் குவாரி திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்